பிரித்தானியாவில் அதிகரித்து வரும் புலம்பெயர்தல் விவகாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய ரீதியில் ஒரு வார கால வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு ‘The Great British National Strike’ அமைப்பு அந்நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இவ்வமைப்பின் தலைவரான ரிச்சர்ட் டொலால்ட்சன் (Richard Donaldson) விடுத்துள்ள அறிவிப்பில் விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இது வெறும் அலுவலக வேலைநிறுத்தம் மட்டுமல்லாது, பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல், பொருட்களைக் கொள்வனவு செய்யாதிருத்தல் (Shopping) என அனைத்துப் பொதுச் செயற்பாடுகளையும் ஒரு வாரத்திற்கு நிறுத்துமாறு அவர் கோரியுள்ளார்.
புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் குறித்து ரிச்சர்ட் டொலால்ட்சன் தெரிவித்துள்ளதாவது: சட்டவிரோதப் புலம்பெயர்ந்தோர், குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் மற்றும் நீண்டகாலமாக வேலையில்லாமல் இருப்பவர்களை உடனடியாக நாடுகடத்த வேண்டும்.
நிலைமை சீராகும் வரை புதிய புலம்பெயர்தல் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும்.
சட்டப்படி வந்தவர்களை மதித்தாலும், மருத்துவம், கல்வி, வீடமைப்பு போன்ற பொதுச் சேவைகளில் பிரித்தானிய குடிமக்களுக்கே முதலிடம் வழங்கப்பட வேண்டும்.
இந்த வேலைநிறுத்த அழைப்பு பிரித்தானியாவில் எந்தளவு தாக்கத்தைச் செலுத்தும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. ரிச்சர்ட் டொலால்ட்சன் சமூக ஊடகங்களில் வெளியிட்ட இந்த அழைப்பிற்கு இதுவரை சுமார் 2,000 ‘விருப்பங்கள்’ (Likes) மட்டுமே கிடைத்துள்ளன. இதனால், நாடு தழுவிய ரீதியில் மக்கள் இதில் பங்கேற்பார்களா அல்லது இது ஒரு சிறிய குழுவின் முயற்சியாக முடிந்துவிடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அரசாங்கம் புலம்பெயர்தல் சட்டங்களைக் கடுமையாக்கி வரும் சூழலில், இவ்வாறான போராட்ட அழைப்புகள் பொதுமக்களிடையே எத்தகைய விவாதங்களை உருவாக்கும் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.