ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை, சுமார் 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) வெடித்தது. இந்தச் சம்பவம் காரணமாக, வானில் சுமார் 14 கிலோமீட்டர் உயரத்துக்குச் சாம்பலும், புகை மண்டலமும் சூழ்ந்துள்ளது.
அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அபார் (Afar) பகுதியில் அமைந்துள்ள ஹெய்லி குப்பி எரிமலை தொடர்ந்து பல மணி நேரம் வெடித்துச் சிதறியது.
எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து உருவான சாம்பல் சூழ் மேகங்கள் ஏமன், ஓமன், இந்தியா மற்றும் வடக்கு பாகிஸ்தான் பகுதிகளைச் சூழ்ந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த விவரங்களை எத்தியோப்பிய அரசு அதிகாரிகள் இதுவரை உறுதி செய்யாமல் உள்ளனர்.
எரிமலை சாம்பல் ஆலோசனை மையம், எத்தியோப்பியாவில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு குறித்தும், அதனால் மேகங்களில் சாம்பல், புகை சூழ்ந்ததையும் உறுதி செய்துள்ளது.
இதனால் மத்திய கிழக்கு பாதையில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வழியை விமான நிறுவனங்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் டி.ஜி.சி.ஏ. (DGCA) மற்றும் இந்திய விமான நிலைய ஆணையமும் தெரிவித்துள்ளன. நிலைமை சீராகும் வரை விமான நிலையங்கள் கவனமுடன் விமானப் போக்குவரத்தைக் கையாளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.