மேற்கு லண்டனில் உள்ள அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட புகலிட விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 20 வயதான ஒருவர், 15 வயதுச் சிறுமியைக் கடத்தித் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக வெளியான தகவல்களுக்கு, ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் முற்றாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 1ஆம் திகதி மேற்கு லண்டனில் உள்ள ஃபெல்தாமில் (Feltham) இந்தச் சம்பவம் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடத்தல், துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகச் செயற்பாடு உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகள் குறித்த இலங்கைப் பிரஜை மீது சுமத்தப்பட்டுள்ளன.
புகலிடம் கோருபவர்களைத் தங்க வைக்க அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் மூன்று நட்சத்திர செயிண்ட் கில்ஸ் விடுதியில் வசித்து வரும் குறித்த 20 வயதான நபர், காணொளி மூலம் ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் சிங்கள மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் சாட்சியம் அளித்து, அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் தாம் குற்றமற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய நபரைத் தொடர்ந்து காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீதிபதி 2026 ஏப்ரல் மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.