உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த தலைமுறை ஏஐ மொடல்கள் குறித்த இரகசிய விபரங்கள் அண்மையில் தற்செயலாகக் கசிந்துள்ளன. நிறுவனத்தின் உள்ளடக்க மேலாண்மை அமைப்பில் (CMS) ஏற்பட்ட மனிதத் தவறு காரணமாக, சுமார் 3,000 க்கும் மேற்பட்ட கோப்புகள் மற்றும் வரைவு வலைப்பதிவுகள் (Draft Blogs) பொதுவெளியில் பகிரங்கமாகியுள்ளன. இந்தத் தகவல் கசிவு தொழில்நுட்ப உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கசிவின் மூலம் ‘கிளாட் மைத்தோஸ்’ (Claude Mythos) மற்றும் ‘கிளாட் கேபிபாரா’ (Claude Capybara) எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய மொடல்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இவை தற்போதுள்ள ‘கிளாட் ஓபஸ் 4.6’ (Claude Opus 4.6) ஐ விட பலமடங்கு அறிவுத்திறன் மற்றும் வேகம் கொண்டவை எனத் தெரியவந்துள்ளது. குறிப்பாக, மென்பொருள் கோடிங், கல்விசார் பகுத்தறிவு மற்றும் சைபர் பாதுகாப்பு சோதனைகளில் இந்த மொடல்கள் வியக்கத்தக்க முடிவுகளைக் காட்டியுள்ளதாக அந்த ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
புதிய ‘மைத்தோஸ்’ மொடல், மென்பொருள்களில் உள்ள பாதுகாப்புத் துவாரங்களைக் கண்டறிந்து ஊடுருவுவதில் மனிதர்களை விடவும், மற்ற ஏஐ மொடல்களை விடவும் மிக வேகமாகச் செயல்படும் திறன் கொண்டது. ஹேக்கர்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், தற்போதைய நவீன பாதுகாப்பு அரண்களையும் எளிதில் தகர்க்க முடியும் என்பதால், இதை வெளியிடுவது குறித்து ஆந்த்ரோபிக் நிறுவனமே மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. இந்த மொடல்கள் “மிகவும் வலிமையானவை” என்றும், “தவறான கைகளில் கிடைத்தால் அது பேரழிவை ஏற்படுத்தும்” என்றும் நிறுவனத்தின் வரைவு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் கசிவு வெளியானதைத் தொடர்ந்து, சர்வதேச பங்குச்சந்தையில் பெரும் தாக்கம் ஏற்பட்டது. குறிப்பாக, ‘கிரவுட்ஸ்டிரைக்’ (CrowdStrike), ‘பாலோ ஆல்டோ’ (Palo Alto) போன்ற முன்னணி சைபர் பாதுகாப்பு நிறுவனங்களின் பங்குகள் சுமார் 5% முதல் 8% வரை சரிந்தன. ஒரே நாளில் இத்துறை சார்ந்த நிறுவனங்களின் சுமார் 14.5 பில்லியன் டொலர் சந்தை மதிப்பு துடைத்தெறியப்பட்டது. இந்த அபாயத்தைக் குறைக்க, ஆந்த்ரோபிக் இந்த மொடல்களை முதலில் சைபர் பாதுகாப்பு வல்லுநர்களிடம் வழங்கி, அவர்களின் கட்டமைப்புக்களைப் பலப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.