ஜப்பானின் நாகோயா குடிவரவு தடுப்பு நிலையத்தில் 2021-இல் உயிரிழந்த இலங்கைப் பெண் விஷ்மா சந்தமாலியின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என, நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் மருத்துவ நிபுணர் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.
விஷ்மாவின் குடும்பத்தினர் ஜப்பான் அரசுக்கு எதிராகத் தொடர்ந்துள்ள இழப்பீட்டு வழக்கு நாகோயா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதன்போது சாட்சியமளித்த மருத்துவர் மசாமுனே ஷிமோ, விஷ்மாவின் மரணம் குறித்த அதிர்ச்சியூட்டும் மருத்துவத் தகவல்களை வெளியிட்டார்:
விஷ்மா கடுமையான நீரிழப்பு மற்றும் உணவுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது சிறுநீர் பரிசோதனை முடிவுகள் அவர் கடுமையான பட்டினி நிலையில் இருந்ததை உறுதிப்படுத்தின.
போதிய சத்துக்கள் இல்லாததால் வைட்டமின் B1 குறைபாடு ஏற்பட்டு, அவருக்கு “பெரிபெரி” எனப்படும் இதய நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இறுதியில் அவர் அதிர்ச்சி (Shock) நிலைக்குச் சென்று, பல உடல் உறுப்புகள் செயலிழந்ததால் உயிரிழந்துள்ளார்.
விஷ்மாவின் உயிரைக் காப்பாற்ற அதிகாரிகளுக்கு மூன்று சந்தர்ப்பங்கள் இருந்ததாக மருத்துவர் ஷிமோ சுட்டிக்காட்டினார். சிறுநீர் பரிசோதனையில் அசாதாரண மாற்றங்கள் தெரிந்தபோதே, உடனடியாக இரத்தப் பரிசோதனை செய்து, நரம்பு வழியாக திரவங்களை (IV Drip) செலுத்தியிருக்க வேண்டும்.
இரண்டாவது வாய்ப்பு 2 நாட்களுக்கு முன் விஷ்மாவின் இரத்த அழுத்தம் அளவிட முடியாத அளவிற்குச் சரிந்து, ஆழமான மூச்சுத் திணறல் ஏற்பட்டபோது அவசர சிகிச்சை அளித்திருக்க வேண்டும்.
மூன்றாவது வாய்ப்பு உயிரிழந்த நாள் மரணமடைந்த அன்றும் அவரது உடல்நிலை மிக மோசமாக இருந்தும், முறையான மருத்துவத் தலையீடு செய்யப்படவில்லை.
இந்த சாட்சியம் ஜப்பானிய குடிவரவு அதிகாரிகளின் அலட்சியப் போக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதுடன், விஷ்மாவின் குடும்பத்தினருக்கான நீதிப் போராட்டத்தில் மிக முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

