புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையில் இன்று (12) கல்வி அமைச்சிற்கு (இசுருபாய) முன்பாகத் தொடர்ச்சியான சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப் பெற வேண்டும் மற்றும் கல்வி அமைச்சராகப் பதவி வகிக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்தப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாகும்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுடன் சிவில் சமூகப் பிரதிநிதிகள், சிறுவர்களுக்கான வளர்ந்தோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
தமது கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு கிடைக்கும் வரை இந்த மறியல் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனப் போராட்டக்காரர்கள் சூளுரைத்துள்ளனர்.
கல்வித் துறையில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் எவ்வித அறிவியல் அடிப்படையும் அற்றவை என்றும், இவை மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் என்றும் விமல் வீரவங்ச குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கத்தின் இந்த நகர்வுக்கு நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு நிலவுவதை வெளிப்படுத்துவதே இந்தச் சத்தியாக்கிரகத்தின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சுப் பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதுடன், போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக அங்கேயே தங்கியிருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இது குறித்து அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தப் பதிலையும் வழங்கவில்லை.