தமிழக அரசியலுக்கும் திரைத்துறைக்கும் இடையிலான பிணைப்பு அரை நூற்றாண்டைக் கடந்து தொடர்ந்து வருகிறது. எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை பல நட்சத்திரங்கள் தேர்தல் களம் கண்டுள்ள நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல் முறையாக சட்டசபை தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறார்.
தமிழக அரசியலில் முத்திரை பதித்த நடிகர்கள் தங்கள் முதல் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்:
எம்.ஜி.ஆர் – 1967- பரங்கிமலை – வெற்றி
சிவாஜி கணேசன் -1989 – திருவையாறு – தோல்வி
ஜெயலலிதா – 1989 – போடிநாயக்கனூர் – வெற்றி
விஜயகாந்த் – 2006 – விருத்தாசலம் – வெற்றி
கமல்ஹாசன் – 2021 – கோவை தெற்கு – தோல்வி
விஜய் போட்டியிடப்போகும் தொகுதி குறித்துப் பல்வேறு யூகங்கள் (மதுரை, விக்கிரவாண்டி, விருகம்பாக்கம்) நிலவி வந்த நிலையில், தற்போது வேளச்சேரி தொகுதி முன்னிலையில் உள்ளது.
இதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுபவை:
ஜோதிட ரீதியாக ‘வி’ எழுத்தில் தொடங்கும் தொகுதிகள் விஜய்க்கு ராசியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இங்கு ஐ.டி (IT) துறையில் பணிபுரியும் இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இது விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்குச் சாதகமாக அமையும் எனக் கணிக்கப்படுகிறது.
விஜய்யின் இல்லம் அமைந்துள்ள பனையூருக்கு மிக அருகில் இருப்பதால், பிரசாரப் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.
2011-இல் உருவான இத்தொகுதியில் தி.மு.க அல்லது அ.தி.மு.க இன்னும் வலுவாகக் கால் ஊன்றவில்லை. தற்போது காங்கிரஸ் வசம் உள்ள இத்தொகுதி, வரும் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் வரிசையில் முதல் தேர்தலிலேயே விஜய் வெற்றி பெற்று முத்திரை பதிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தேர்தல் திகதி அறிவிக்கப்படும் வரை இந்த ‘சஸ்பென்ஸ்’ நீடிக்கும் என்பதில் சந்தேகமில்லை