ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜபக்சக்களின் பணம் உகண்டாவில் இருப்பதாக ஜனாதிபதி அநுர தலைமையிலான தரப்பினர் நீண்டகாலமாகக் கூறி வந்தனர். அந்த டொலர்களை மீட்பதற்கு இதுவே பொருத்தமான காலம் என அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த நிதியை மீட்பதற்கான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கத் தாம் தயார் எனவும், தேவையெனில் இதற்காகச் சத்தியக் கடதாசிகளை (Affidavits) வழங்கவும் தான் முன்வருவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். இருப்பினும், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் பலமான எதிர்க்கட்சியாகச் செயற்படவும் இத்தகைய இணைவுகள் அவசியமானவை என்றார்.
நாட்டின் நன்மைக்காக எதிர்க்கட்சியாகத் தாம் இணைந்து செயற்பட வேண்டிய இடங்களில் உரிய ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் ஊடகங்களிடம் மேலும் குறிப்பிட்டார்.