ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (08) 17 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இந்த வழக்கில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைப் பின்பற்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்துப் பதிலளிக்க முடியாது என அரசாங்கம் கூறுவது ஏற்புடையதல்ல.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து மற்றும் மருந்து விவகாரங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கும்போது, அவை குறித்து நாடாளுமன்றில் பதிலளிக்கப்படுகிறது. ஆனால் லசந்த விவகாரத்தில் மட்டும் ஏன் இந்தத் தயக்கம்?
17 வருடங்கள் கடந்தும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என அவர் சாடினார்.
ரவி கருணாநாயக்கவின் கேள்விக்குப் பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, ஊடகவியலாளர் கொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
லசந்த விக்ரமதுங்க கொலையுடன் தொடர்புடையவர்கள் கடந்த காலங்களில் ஆட்சியாளர்களாகவும், அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். அதனால்தான் விசாரணைகள் முடக்கப்பட்டன. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நிச்சயமாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
இன்று காலை பொரளை கனத்தை மயானத்தில் லசந்த விக்ரமதுங்கவின் 17-வது ஆண்டு நினைவு நிகழ்வு நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தியதுடன், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.