யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு, போர்க்காலத்தின் போது தமிழீழ வைப்பகத்தில் (Tamil Eelam Bank) அடகு வைக்கப்பட்ட நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் தவறிவிட்டதாகக் கடும் அதிருப்தியை வெளியிட்டார்.
சிறிதரன் தனது உரையில், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களின் போது, தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட நகைகள் மீள ஒப்படைக்கப்படும் எனத் தற்போதைய அரசாங்கம் பகிரங்கமாக உறுதியளித்திருந்தது.
புதிய அரசாங்கம் பதவியேற்று ஓராண்டு காலம் கடந்துள்ள நிலையிலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ் மக்களுக்கு இதுவரை எந்தவொரு சாதகமான செய்தியும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இறுதி யுத்தத்தின் போது தமது வாழ்நாள் சேமிப்பான நகைகளை இழந்த மக்கள், இன்று கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களின் மனநிலையை இந்த அரசு கருத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் சாடினார்.
“மக்களின் நகைகள் தற்போது எங்கே உள்ளன? அவற்றை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பதற்கான ஏதேனும் முறையான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் உள்ளதா?” என அவர் நேரடியாகக் கேள்வியெழுப்பினார்.
யுத்த காலத்தின் போது வடக்கு – கிழக்கில் இயங்கி வந்த தமிழீழ வைப்பகங்களில் மக்கள் பெருமளவிலான நகைகளை அடகு வைத்திருந்தனர். யுத்த முடிவின் பின்னர் பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்ட இந்த நகைகளில் ஒரு தொகுதி ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் விடுவிக்கப்பட்ட போதிலும், கணிசமான அளவு நகைகள் இன்னும் மத்திய வங்கியின் வசமே உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதனை முழுமையாக விடுவிக்கக் கோரி சிறிதரன் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

