பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அலுவலகப் பணிகளைத் தனித்தனியாக நிர்வகிப்பதற்கும், உரையாடல்களை மெருகூட்டுவதற்கும் இந்தப் புதிய கருவிகள் உதவும் என வட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா (Meta Platforms) தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீண்டகாலமாக அண்ட்ரோய்ட் பயனர்களுக்கு மட்டும் கிடைத்து வந்த ‘ஒரே கைபேசியில் இரண்டு வட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்தும் வசதி’ இப்போது ஐபோன் (iOS) பயனர்களுக்கும் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களைப் பகிரும் முன்னரே அவற்றைச் செம்மைப்படுத்த ‘மெட்டா ஏஐ’ (Meta AI) தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புகைப்படத்தின் பின்னணியை மாற்றுவதற்கோ அல்லது தேவையற்ற பகுதிகளை அகற்றுவதற்கோ பயனர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு கைபேசியிலிருந்து மற்றொரு புதிய கைபேசிக்கு மாறும் போது, ஐபோனிலிருந்து அண்ட்ரோய்டுக்கும் அல்லது அண்ட்ரோய்டிலிருந்து ஐபோனுக்கும் எவ்விதச் சிக்கலுமின்றி உரையாடல் வரலாறுகளை (Chat History) மாற்றும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. இது பயனர்கள் தமது பழைய தரவுகளை இழக்காமல் புதிய சாதனங்களுக்கு மாறப் பெரிதும் உதவும்.
நினைவகச் சேமிப்பை (Storage Management) மேம்படுத்தும் வகையில், அதிக கொள்ளளவு கொண்ட கோப்புகளை (Large Files) மட்டும் கண்டறிந்து அழிக்கும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் முழு உரையாடலையும் நீக்க வேண்டிய அவசியம் இன்றி, தேவையற்ற ஊடகக் கோப்புகளை மட்டும் அகற்றி கைபேசியின் நினைவகத்தைச் சேமிக்க முடியும். மேலும், பயனர்கள் ஒரு எமோஜியை (Emoji) தட்டச்சு செய்யும் போது, அதற்கு இணையான ஸ்டிக்கர்களை வட்ஸ்அப் பரிந்துரைக்கும் வசதியும், உரையாடல்களின் சூழலைப் புரிந்து கொண்டு பொருத்தமான பதில்களைத் தயாரித்து வழங்கும் ‘ஏஐ’ (AI) எழுத்து உதவியும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
இந்த அதிநவீன வசதிகள் அனைத்தும் பயனர்களின் தனியுரிமையைப் (Privacy) பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் உறுதியளித்துள்ளது. தற்போது சில குறிப்பிட்ட பிராந்தியங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதிகள், வரும் வாரங்களில் படிப்படியாக உலகெங்கிலும் உள்ள அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கப்பெறும். தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப வட்ஸ்அப் தன்னைத் தகவமைத்துக் கொள்வது, அதன் போட்டித் தன்மையை மேலும் அதிகரித்துள்ளதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.