மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) கொள்கைகளுக்கு ஏற்ற கல்விச் சீர்திருத்தங்களை முழு நாட்டிற்கும் திணிக்க முயல்வது தவறான முடிவு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் கொண்டுவரத் துடிக்கும் கல்விச் சீர்திருத்தங்கள் நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அன்றி, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைத் திருப்திப்படுத்துவதற்காகவே அமைகின்றன என அவர் சாடினார்.
“அகங்காரத்துடன் எடுக்கப்படும் இத்தகைய தன்னிச்சையான முடிவுகள் நாட்டுக்கோ, மக்களுக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ எவ்வித நீதியையும் பெற்றுத்தராது” என அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் மதம் மற்றும் கலாசார விவகாரங்களில் ஜனாதிபதி தலையிட வேண்டாம் என்றும், அவை உணர்வுபூர்வமான விடயங்கள் என்றும் நாமல் ராஜபக்ச இதன்போது கோரிக்கை விடுத்தார்.
அரச இயந்திரத்திலும் கல்வி முறையிலும் மாற்றங்கள் தேவை என்பதைத் தானும் பொதுமக்களும் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், அந்த மாற்றங்கள் நாட்டின் தனித்துவத்தையும் தேவைகளையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
“நாட்டின் கல்வி முறைமைக்கு முரணான சீர்திருத்தங்களை வலுக்கட்டாயமாக அறிமுகப்படுத்த முயல்வதன் மூலம் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார். முறையான ஆய்வின்றி முன்னெடுக்கப்படும் இந்த நகர்வுகள் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என அவர் கவலை வெளியிட்டார்.