பரந்தூர் போராட்டக்காரர்களை சந்திக்க போகும் விஜய்.., அனுமதி வழங்கிய பொலிஸார்
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை சந்திக்க தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
தமிழக மாவட்டமான காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஆனால், பசுமை விமான நிலையம் அமைக்கவுள்ள இடத்தைச் சேர்ந்த கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு, பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களையும், விவசாயிகளையும் பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து வருகின்றனர்.
அந்தவகையில், பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி மற்றும் தமிழக டிஜிபி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்நிலையில், பரந்தூர் போராட்டக் குழுவை சந்திக்க விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, நாளை மறுநாள் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பரந்தூர் செல்கிறார். அங்கு, விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்ட குழுவை சந்தித்து ஆதரவளிக்கவுள்ளார்.