திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாண வங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
திருகோணமலையில் சர்ச்சைக்குரிய வகையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரத்தில், இனங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு இவ்விரு தேரர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட விளக்கமறியல் உத்தரவை ரத்து செய்து, அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் இன்று (22) மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
தேரர்கள் தரப்பு சட்டத்தரணிகள் மற்றும் அரசு தரப்பு சட்டத்தரணிகளின் வாதப்பிரதிவாதங்கள் விரிவாக ஆராயப்பட்டன.அனைத்து தரப்பு சமர்ப்பணங்களையும் கேட்டறிந்த நீதியரசர்கள் குழாம், இந்த மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பை எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி அறிவிப்பதாக உத்தரவிட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் மதத் தலங்கள் அமைப்பது தொடர்பான சட்டச் சிக்கல்கள் மற்றும் இன நல்லிணக்கம் குறித்த விவாதங்கள் மேலெழுந்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.