மலையகத் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பாவின் ஏற்பாட்டில், கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் விழா இன்று (04) கொட்டகலை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 500 மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு உபகரணங்களை விநியோகித்தார்.
பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொட்டகலை வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் ஏற்பட்டுள்ள பாரதூரமான தவறு குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
“தரம் 6 பாடப் புத்தக விவகாரமானது மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடையது. இதற்கான முழுப் பொறுப்பையும் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என அவர் வலியுறுத்தினார்.
மலையக மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த இவ்வாறான உதவிகள் தொடர வேண்டும் எனத் தெரிவித்த அவர், அரசாங்கம் கல்வித் துறையில் நிலவும் குளறுபடிகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.