ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) இன்று உத்தியோகபூர்வமாக விலகியுள்ளது.
2025 ஆம் ஆண்டு பதவியேற்ற முதல் நாளிலேயே, உலக சுகாதார அமைப்பின் செயற்பாடுகள் அமெரிக்காவிற்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதாகக் கூறி, அதிலிருந்து விலகும் உத்தரவில் ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
ஒரு வருட முன்னறிவிப்புக் காலம் இன்றுடன் முடிவடைந்த போதிலும், அமெரிக்கா செலுத்த வேண்டிய 260 மில்லியன் டொலர் நிலுவைக் கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் மொத்த நிதியில் 18 சதவீதத்தைப் பங்களித்து வந்த அமெரிக்கா வெளியேறியுள்ளதால், நிறுவனம் பாரிய நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க உலக சுகாதார அமைப்பு மிகக்கடினமான முடிவுகளை எடுத்துள்ளது. தனது நிர்வாகக் குழுவை பாதியாகக் குறைத்துள்ளது. இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் 25 சதவீதப் பணியாளர்களைப் (கால்வாசிப் பேர்) பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.உலகளாவிய நோய் தடுப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நிதியுதவிகளைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவை “மிகப்பெரிய இழப்பு” என வர்ணித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், அமெரிக்கா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில், அமெரிக்காவின் நிலுவைத் தொகையை வசூலிப்பது மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஏனைய உறுப்பு நாடுகள் விவாதிக்கவுள்ளன.