அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் பேரில், அடுத்த ஆண்டு இந்தியாவுக்குப் பயணிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசியபோது, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து தனது இந்தியப் பயணம் குறித்து அவர் அறிவித்தார்.
ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியாவுடனான நமது பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் சென்றுகொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டார் என்பது நல்ல விடயம். அவர் எனது நண்பர், சிறந்த மனிதர்.”
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரை இந்தியா மறைமுகமாக ஆதரித்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வந்தது. இந்த விவகாரத்தில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முதலில் 25 சதவீதம் பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்தார், பின்னர் வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலைப் படிப்படியாக நிறுத்துவோம் எனப் பிரதமர் மோடி தன்னிடம் உறுதியளித்ததாக ட்ரம்ப் கூறி வருகிறார்.
வரி விதிப்பு குறித்த தனது நிலைப்பாட்டை ட்ரம்ப் வலியுறுத்திக் கூறினார்:
“நான் முடிவுக்குக் கொண்டு வந்த எட்டு போர்களில் ஐந்து அல்லது ஆறு போர்கள், வரி விதிப்புகளால் முடிவுக்கு வந்தன. உதாரணமாக, இரண்டு அணு ஆயுத நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். எட்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவர்களிடம், ‘நீங்கள் சண்டையை நிறுத்தாவிட்டால், நான் உங்கள் மீது வரி விதிப்பேன்’ என்று சொன்னேன். 24 மணிநேரத்துக்குள் நான் போரை முடித்துவைத்தேன். வரிவிதிப்பு இல்லையென்றால், அந்தப் போரை என்னால் நிறுத்தியிருக்க முடியாது. வரிவிதிப்பு ஒரு சிறந்த தேசிய பாதுகாப்பு முறை” என்று அவர் கூறினார்.