தலிபான்களுடன் அமெரிக்கா மறைமுக பேச்சு

usa8732 1560233116

usa

ஆப்கானிஸ்தானிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்க அமெரிக்கா சம்மதித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க படைகள் வாபஸானதையடுத்து,
கடந்த ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முற்றிலுமாக கைப்பற்றினர்.

5 ஆண்டுகள் தலிபான்கள் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் இருந்தது. அப்போது பல்வேறு கொடூர செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர்.

இதனால் பாகிஸ்தான், சவுதி அரேபியா தவிர வேறெந்த நாடுகளும் தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை.

ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியுள்ள தலிபான்கள், பழைய காலத்தை போல மோசமான செயல்களில் ஈடுபடமாட்டோம் என  அறிவித்தனர்.

கடுமையான அடக்குமுறைகளை தலிபான்கள் கொண்டு வந்துள்ளனர். பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் மரண தண்டனை உள்ளிட்ட கொடூர தண்டனைகளையும் வழங்கி வருகிறார்கள்.
இதனால் மற்ற நாடுகள் தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிக்க தயங்கி வருகின்றன.

இந்தநிலையில் பரம எதிரியான அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள தலிபான்கள் முயற்சி செய்தனர்.

இது சம்பந்தமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் கத்தார் நாட்டில் உள்ள டோகாவில் இருதரப்பு பிரதிநிதிகளும் இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமையும், நேற்றும் இரு தரப்பினருக்கும் இடையே அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றன.

அப்போது அமெரிக்கா கடுமையான நிபந்தனைகளை விதித்தது.

இதை ஏற்றுக் கொள்ள தலிபான்கள் மறுத்தனர்.

இதனால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் நடத்தப்பட்டது.

அதிலும் சரியான முடிவுகள் எட்டப்படவில்லை. ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் செயல்படாதது போல் ஒடுக்கப்பட வேண்டும் என்பது

அமெரிக்காவின் முக்கிய கோரிக்கையாகும்.

ஆனால் தலிபான்கள் தங்கள் தரப்பில் தெரிவித்த கோரிக்கைகளை ஏற்க வேண்டும், தங்கள் அரசை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

அவ்வாறு அமெரிக்கா செய்யவில்லை என்றால் ஐ.எஸ். பயங்கரவாதிகளையும் மற்ற பயங்கரவாதிகளையும் எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்று தலிபான்கள் எச்சரித்தார்கள்.

எனவே பேச்சுவார்த்தையில் உடன்பாடுகள் ஏற்படவில்லை.

அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் மக்கள் பாதிப்பு அடையாமல் இருக்க உணவு, மருந்து உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை செய்வதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் என்ன வி‌ஷயங்கள் பேசப்பட்டது? என்ன முடிவுகள் எடுக்கப்பட்டது? என்பது பற்றி அமெரிக்கா இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

Exit mobile version