நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
புதிய பல்கலைக்கழக சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் வரை, பல்கலைக்கழகங்களுக்குப் புதிய பீடாதிபதிகள் (Deans) மற்றும் துறைத் தலைவர்களை (Heads of Departments) நியமிப்பதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானமானது பல்கலைக்கழகங்களின் சுயாதீனத் தன்மையைப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கங்களின் சம்மேளனம் (FUTA), அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.
புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, அரசாங்கம் மாற்றுப்பாலினத்தை (LGBTQ+) ஊக்குவிக்க முயற்சிப்பதாக கல்வித் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், முன்மொழியப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்புகளில் பல சிக்கல்கள் உள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
கல்வித் துறையில் இத்தகைய மாற்றங்களைக் கொண்டுவருவது நாட்டின் கலாசார விழுமியங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் இதன்போது எச்சரிக்கை விடுத்தார்.