கண்டி பெருநகர எல்லைக்குள் அங்கீகரிக்கப்படாத வகையில் வியாபாரத்தில் ஈடுபடும் அனைத்து தெரு வியாபாரிகளும் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பிறகு கட்டாயம் அகற்றப்படுவார்கள் என கண்டி மேயர் சந்திரசிறி விஜேநாயக்க அறிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தெரு வியாபாரிகளை அகற்ற ஏற்கனவே திட்டமிடப்பட்டது. எனினும், அவர்களின் கோரிக்கையை ஏற்று கருணை அடிப்படையில் டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்த அவகாசம் தற்போது முடிவுக்கு வருகிறது.
பல வியாபாரிகளுக்கு ஏற்கனவே மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், அவர்கள் அதனைப் பயன்படுத்தாமல் மீண்டும் தெருக்களுக்கே வந்து வியாபாரம் செய்வதாக மேயர் குற்றம் சாட்டினார்.
“மாநகர சபை, நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி என அனைத்து மட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தியின் அதிகாரம் இருப்பதால், எடுக்கப்பட்ட இந்த முடிவை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை,” என மேயர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்மானம் எந்தக் காரணத்திற்காகவும் மாற்றப்படாது என்றும், நகரின் ஒழுங்குமுறையைப் பேணுவதற்காக இது கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் உறுதிபடத் தெரிவித்தார்.

