அவதூறு பிரசாரத்தை ஏற்க முடியாது: கொள்கை வேறுபாடு இருந்தாலும் பிரதமருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த கஜேந்திரகுமார்!

gagenthirakumar

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியாவுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் அவதூறு பிரசாரங்களை, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் (TNPF) கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் ஹரிணி அமரசூரியாவுடனும், அவரது தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்துடனும் தமது கட்சிக்குக் கடுமையான கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

கொள்கை வேறுபாடுகள் ஒருபுறம் இருந்தாலும், ஒரு பெண்ணாகவும் அமைச்சராகவும் அவருக்கு எதிராக நடத்தப்படும் “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் கண்டிக்கத்தக்க” அவதூறு பிரசாரங்களுடன் தாம் ஒருபோதும் இணையப் போவதில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.

அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், தரம் 06 ஆங்கிலப் பாடப் புத்தகத்தின் பயிற்சித் தொகுப்பில் (Module), பொருத்தமற்ற உள்ளடக்கங்களைக் கொண்ட இணையதள இணைப்பு ஒன்று தவறுதலாகச் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில தரப்பினர் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் கல்வி அமைச்சருக்கு எதிராகத் தனிப்பட்ட ரீதியிலான அவதூறுகளைப் பரப்பி வந்தனர். இந்தச் சூழலிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

 

 

 

Exit mobile version