உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான உணவுப் பஞ்சம் தலைதூக்கும் என ஐக்கிய நாடுகள் சபை (UN) எச்சரித்துள்ளது.
சூடானில் தற்போதுள்ள உணவு இருப்புகள் எதிர்வரும் மார்ச் மாதமளவில் முழுமையாகத் தீர்ந்துவிடும் என ஐ.நாவின் உலக உணவுத் திட்டம் (WFP) சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் வரை நிலைமையைச் சமாளிப்பதற்கும், பட்டினிச் சாவுகளைத் தடுப்பதற்கும் உடனடியாக 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர நிதியாகத் தேவைப்படுவதாக அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சூடான் இராணுவத்திற்கும், துணை இராணுவக் குழுக்களுக்கும் இடையே 1000 நாட்களைக் கடந்து (மூன்றாண்டுகளாக) நீடித்து வரும் போரினால் நாடு நிலைகுலைந்துள்ளது:
இதுவரை சுமார் 14 மில்லியன் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளனர். சூடான் மொத்த சனத்தொகையில் 50 சதவீதமானோர் தற்போது கடும் பட்டினியை எதிர்கொண்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
போரினால் நேரடியாகவும், பசியினால் மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
பஞ்சம் மற்றும் பாரிய இடம்பெயர்வுகளைத் தடுக்க சர்வதேச சமூகம் முன்வந்து நிதியுதவி வழங்க வேண்டும் என உலக உணவுத் திட்டம் வலியுறுத்தியுள்ளது. மனிதாபிமான உதவிகள் உரிய நேரத்தில் சென்றடையாவிட்டால், இந்தத் தசாப்தத்தின் மிக மோசமான மனிதப் பேரழிவைச் சூடான் சந்திக்க நேரிடும் என அஞ்சப்படுகிறது.

