ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அமெரிக்காவின் முன்னிலையில் ஜெனீவாவில் இன்று போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இந்த இராஜதந்திர நகர்வுகளுக்கு மத்தியிலும், இரு நாடுகளும் எல்லை கடந்த தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கியத் துறைமுகமான தமன் (Taman) மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
மறுபுறம், உக்ரைனின் ஒடேசா (Odesa) பிராந்தியத்தை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய சரமாரி ட்ரோன் தாக்குதல்களில் அந்தப் பிராந்தியமே நிலைகுலைந்துள்ளது. அங்குள்ள எரிசக்தி நிலையங்கள், குடிநீர் விநியோகக் கட்டமைப்புகள் மற்றும் போக்குவரத்துத் தளங்கள் கடும் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக ஒடேசா பிராந்தியம் முழுவதும் மின் விநியோகம் முடக்கப்பட்டு, பொதுமக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.
முன்னதாக, மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலென்ஸ்கி, சமாதானப் பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் மட்டுமே தொடர்ந்து விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாகக் குற்றம் சாட்டினார். ரஷ்யாவின் பிடிவாதத்தைக் கண்டுகொள்ளாமல், உக்ரைனை மட்டும் சமரசத்திற்கு வற்புறுத்துவது நீதியான முறையல்ல என அவர் சாடினார்.
தற்போது இந்தப் பிரச்சினையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகள், எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தொடங்கினாலும், களத்தில் நிலவும் தாக்குதல்கள் ஒரு நிரந்தரப் போர்நிறுத்தம் ஏற்படுமா என்பதில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.