வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தின் மீது பிரித்தானிய அரசாங்கத்தால் விதிக்கப்படவுள்ள புதிய வரித் திட்டம் குறித்து, நாட்டின் முன்னணிப் பல்கலைக்கழகம் ஒன்றின் துணைவேந்தர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அவர் இந்த நடவடிக்கை ‘தவறான கொள்கை’ என்றும், இது கல்வித் துறையைப் பாதிக்கும் என்றும் விமர்சித்துள்ளார்.
இந்தப் புதிய வரி பிரித்தானியாவின் நீண்டகால நலன்களுக்கு உகந்தது அல்ல என்று துணைவேந்தர் விமர்சித்துள்ளார்.
அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் நிர்வாகத் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலையில், சர்வதேச மாணவர்களுக்கான உலகளாவிய இலக்காகப் பிரித்தானியா மாறுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது என்றும், இந்த வரி அதை இழக்கச் செய்யும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, 6 சதவீத வரி விதிக்கப்பட்டால், இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஆண்டுக்கு 600 மில்லியன் யூரோவுக்கும் அதிகமாக செலவாகும்.
மான்செஸ்டர் பல்கலைக்கழகம் போன்ற முன்னணி நிறுவனங்கள் இதனால் குறிப்பாகப் பாதிக்கப்படும் என்றும், இந்தச் செலவை ஈடுசெய்ய, இருக்கும் நிதியைக் கொண்டே சமாளிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பல பல்கலைக்கழகங்கள் நிதிச் சிக்கலில் தத்தளிக்கும் இந்த நேரத்தில், இது மிகவும் கடினமான சூழலை உருவாக்கும் என்று அவர் எச்சரித்தார்.
இந்த வரியின் மூலம் கிடைக்கும் வருமானம், ஏழை மாணவர்களுக்கான பராமரிப்பு மானியங்களை மீண்டும் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
பிரித்தானியாவின் உயர்கல்வித் துறை கடுமையான நிதிச் சிக்கல்களை எதிர்கொள்கிறது. பணவீக்கம் காரணமாக உள்நாட்டு மாணவர்களின் கல்விக் கட்டண வருமானம் குறைந்ததால் ஏற்பட்ட பற்றாக்குறையைச் சமாளிக்க, பல்கலைக்கழகங்கள் அதிக கட்டணம் செலுத்தும் சர்வதேச மாணவர்களை நம்பி இருந்தன.
ஆனால், அண்மைய குடியேற்ற மற்றும் விசா மாற்றங்கள் காரணமாக 2023ஆம் ஆண்டு முதல், வெளிநாட்டு மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

