16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள் சபை (House of Lords) இரண்டாவது முறையாகத் தனது பலமான ஆதரவை வழங்கியுள்ளது. சிறுவர்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, முன்னாள் கன்சர்வேடிவ் கட்சி அமைச்சர் லார்ட் நாஷ் கொண்டு வந்த இந்தத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 266 வாக்குகளும், எதிராக 141 வாக்குகளும் கிடைத்தன. இந்த முன்மொழிவின்படி, எந்தெந்த சமூக ஊடகத் தளங்கள் சிறுவர்களுக்குக் கிடைக்கக்கூடாது என்பதைத் தீர்மானிக்க அமைச்சர்களுக்கு 12 மாத கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
அவுஸ்திரேலியாவைப் பின்பற்றி இந்தத் தடையைக் கொண்டுவருவது குறித்துப் பிரித்தானிய அரசாங்கம் ஆலோசித்து வரும் நிலையில், 300 பதின்ம வயது சிறுவர்களின் வீடுகளில் ‘டிஜிட்டல் ஊரடங்கு’ மற்றும் நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட முன்னோடித் திட்டங்கள் 6 வார காலத்திற்குச் சோதனை முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மெட்டா (Meta) மற்றும் கூகுள் (Google) ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வயதுக் கட்டுப்பாட்டிற்குத் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. அதேவேளை, டிக்டொக் மற்றும் எக்ஸ் (X) நிறுவனங்கள் இவ்விடயத்தில் நடுநிலை வகிப்பதாகத் தெரிவித்துள்ளன. தொழில்நுட்ப நிறுவனங்கள் லாபத்திற்காகச் சிறுவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உள்ளடக்கங்களை ஊக்குவிப்பதாக லார்ட் நாஷ் இதன்போது கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
தற்போது இந்தச் சட்டம் ‘பிங்-பாங்’ (Ping-pong) எனப்படும் நிலையில், பிரபுக்கள் சபைக்கும் பொதுச்சபைக்கும் இடையில் இழுபறியில் உள்ளது. பொதுச்சபையில் அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை பலம் இருப்பதால், பிரபுக்கள் சபையின் இந்தத் திருத்தம் மீண்டும் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இத்தடைச் சட்டம் சிறுவர்களை இணையத்தின் இருண்ட பகுதிகளுக்குத் தள்ளிவிடும் எனச் சில உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ள போதிலும், அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொது ஆலோசனையில் இதுவரை 30,000க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். இந்த ஆலோசனைக் காலம் வரும் மே 26 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.

