அஸ்டன் வில்லா (Aston Villa) கால்பந்து அணிக்கு எதிரான போட்டியில் இஸ்ரேலிய ரசிகர்களுக்குத் தடை விதித்த விவகாரத்தில், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறைத் தலைமை அதிகாரி மீது தான் நம்பிக்கை இழந்துள்ளதாகப் பிரித்தானிய உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் நாடாளுமன்றத்தில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 6-ஆம் திகதி பர்மிங்காமில் நடைபெற்ற ‘மக்கபி டெல் அவிவ்’ (Maccabi Tel Aviv) மற்றும் அஸ்டன் வில்லா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இஸ்ரேலிய ரசிகர்கள் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடைக்குக் காவல்துறை வழங்கிய தவறான புலனாய்வுத் தகவல்களே காரணம் எனத் தற்போது அம்பலமாகியுள்ளது.
காவல்துறைத் தலைமை அதிகாரி கிரேக் கில்ட்போர்ட் (Craig Guildford) இது குறித்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகளை ஒப்புக்கொண்டுள்ளார். அறிக்கையைத் தயாரிப்பதற்காக மைக்ரோசாப்ட் கோபைலட் எனும் AI (செயற்கை நுண்ணறிவு) சாதனத்தைப் பயன்படுத்தியதை அவர் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரினார்.
அந்த AI சாதனம், உண்மையில் நடக்காத ஒரு போட்டியை (டெல் அவிவ் vs வெஸ்ட் ஹாம்) நடந்ததாகக் காட்டியுள்ளது.
இஸ்ரேலிய ரசிகர்களால் ஆபத்து ஏற்படும் என்பதை மிகைப்படுத்திக் காட்டிய காவல்துறை, அந்த ரசிகர்களுக்கு இருக்கக்கூடிய உண்மையான பாதுகாப்பற்ற சூழலைக் கவனிக்கத் தவறிவிட்டது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் “இது ஒரு மிகப்பெரிய தலைமைத்துவத் தோல்வி. யூத சமூகத்தினருடன் எந்தவித ஆலோசனையும் செய்யாமல், தவறான தரவுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.”
இந்தக் கடுமையான தவறு குறித்து விளக்கம் அளிக்க, காவல்துறைத் தலைமை அதிகாரி கிரேக் கில்ட்போர்ட் எதிர்வரும் ஜனவரி 27-ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

