எக்ஸ் தளத்திற்கு பிரித்தானிய அரசு தடை எச்சரிக்கை: AI மூலம் பெண்களின் புகைப்படங்கள் தவறாகச் சித்தரிக்கப்படுவதால் அதிரடி!

articles2FuvBah1qXvfv4qQ7hUM7d

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெண்களின் புகைப்படங்கள் ஆபாசமாகச் சித்தரிக்கப்படுவதைத் தடுக்கத் தவறியதற்காக, எலான் மஸ்கிற்குச் சொந்தமான ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளத்தைப் பிரித்தானியாவில் முடக்கப் போவதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எக்ஸ் தளத்தில் உள்ள ‘குரோக்’ எனும் AI வசதியைப் பயன்படுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் ஆபாசமாக மாற்றியமைக்கப்பட்டுப் பரப்பப்படுவதாகத் தொடர் புகார்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் (Princess of Wales) உள்ளிட்ட பல முக்கிய நபர்களின் புகைப்படங்கள் ‘டீப் பேக்’ (Deepfake) முறையில் போலியாக உருவாக்கப்பட்டு வைரலானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எக்ஸ் தளம் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிப்பதாகக் கூறி, பிரித்தானிய பாராளுமன்றத்தின் பெண்கள் மற்றும் சமத்துவக் குழு கடந்த 7-ஆம் திகதியே அந்தத் தளத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டது.

பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அந்நாட்டின் ‘ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின்’ (Online Safety Act) கீழ் எக்ஸ் நிறுவனத்தின் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படாவிட்டால், அபராதம் விதிக்கப்படுவதுடன் தளம் முழுமையாக முடக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், எலான் மஸ்க் தரப்பு இதற்கு என்ன பதில் அளிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உலகளவில் எழுந்துள்ளது.

 

 

Exit mobile version