மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸைத் தொடர்ந்து வியட்நாமில் கல்மேகி புயல் ஏற்படுத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததன்படி, இந்தப் புயல் சுமார் 200 பேரைப் பலியெடுத்திருக்கிறது.
கல்மேகி புயல், பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டு இடம்பெற்ற அனர்த்தங்களில் மிக மோசமான அனர்த்தமாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (நவ 6) 114 ஆக இருந்த பலியானவர்களின் எண்ணிக்கை இன்று 188 ஆக அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த அனர்த்தத்தில் 135 பேர் வரை காணாமல் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பசுபிக் கடலில் உருவான கல்மேகி புயல் கடந்த புதன்கிழமை (நவம்பர் 5) பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியைக் கடந்து, தென் சீனக் கடலை நோக்கி நகர்ந்தது. நீக்ரோஸ் ஆக்சிடென்டல், செபு முதலிய மாகாணங்கள் வெள்ளக்காடாயின. வீதியோர வாகனங்கள், கடற்கரையோர வீடுகள், பெரிய அளவிலான கப்பல் கொள்கலன்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அனர்த்தத்தால் தாக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டதாகவும், மீட்புப் பணிகள் தொடர்பில் கவனம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்தப் புயல் இன்று வியட்நாமின் மத்திய பகுதியை நெருங்கியுள்ளது. இதனால் வியட்நாமிலும் சூறாவளி, பலத்த மழை, வெள்ளம் பாரியளவில் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
இன்றிரவு மத்திய வியட்நாமை கல்மேகி புயல் கடுமையாகத் தாக்கக்கூடும் எனவும், இதனால் அங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

