எதிமலை – கொட்டியாகல வனப்பகுதியில் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த இரண்டு பாரிய கஞ்சாத் தோட்டங்கள் பொலிஸாரால் நேற்று (25) சுற்றிவளைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த இரண்டு தோட்டங்களில் இருந்து மொத்தம் 7,356 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டன.
அரை ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 3,754 செடிகள். மற்றுமொரு அரை ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 3,602 செடிகள். கைப்பற்றப்பட்ட அனைத்துக் கஞ்சா செடிகளும் பொலிஸாரால் அவ்விடத்திலேயே தீயிட்டுக் கொளுத்தி அழிக்கப்பட்டன.
குறித்த கஞ்சா செய்கையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்படவில்லை. தப்பியோடியுள்ள சந்தேகநபர்களை அடையாளம் காணவும், அவர்களைக் கைது செய்யவும் எதிமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.