நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு பிரம்மாண்டக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. தற்போது இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முனையங்களில் இந்த எரிபொருள் கையிருப்பினை இறக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
துறைமுக அதிகாரிகளின் தகவல்படி, முதலாவது கப்பலில் இருந்து 20,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 20,000 மெட்ரிக் டன் டீசல் ஆகியவற்றை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, இரண்டாவது கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ள 35,300 மெட்ரிக் டன் பெட்ரோலையும் தரைவழி முனையங்களுக்குக் கொண்டு செல்லும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த மேலதிகக் கையிருப்பு காரணமாக நாட்டில் நிலவிய தற்காலிக எரிபொருள் பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலா 37,000 மெட்ரிக் டன் டீசல் அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் இந்த மாத இறுதியில் இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய களஞ்சிய முனையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார். தற்போது கையிருப்பிலுள்ள எரிபொருள் மற்றும் திட்டமிடப்பட்ட இறக்குமதிகள் மூலம் எதிர்வரும் ஜூலை மாதம் வரை தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க முடியும் எனப் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தற்போது போதுமான அளவு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. கையிருப்பு நிலை சீராகவும் திருப்திகரமாகவும் உள்ளதால், தற்போது நடைமுறையிலுள்ள கியூ.ஆர் (QR) எரிபொருள் ஒதுக்கீட்டை (Quota) அதிகரிப்பது தொடர்பிலும் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

