மன்னார் தாழ்வுபாடு மீன்பிடித் துறையில் இருந்து நேற்று (நவ 15) இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் படகுடன், கடலில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிய மற்றுமொரு மீனவரின் படகு மோதியதில் இரண்டு படகுகளும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
இந்தக் கடற்பரப்பு விபத்து தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து சுமார் 150 மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு படகு கரை திரும்பிய நிலையில், மற்றைய படகு கடலில் மூழ்கியது. மூழ்கிய படகு பின்னர் மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடலில் மூழ்கிய படகில் பயணித்த மீனவர் ஒருவர் இன்று (நவம்பர் 16) காலை சிகிச்சைகளுக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான சம்பவங்களைத் தொடர்ந்து மேலும் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது:
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற மீனவர் தொழிலுக்குச் சென்ற மீன்பிடிப் படகின் வெளி இணைப்பு இயந்திரம் அவரது மீன் வாடியில் வைக்கப்பட்டிருந்தது. விபத்தில் தமது படகு சேதமடைந்ததாகத் தெரிவித்த மற்றைய படகின் மீனவர்கள், குறித்த வாடியின் கதவை உடைத்து அந்த வெளி இணைப்பு இயந்திரத்தை எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்குள்ளான இரண்டு படகுகளின் உரிமையாளர்களும் குறித்த விபத்து குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அத்துடன், வெளி இணைப்பு இயந்திரம் திருட்டுப் போனது குறித்தும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸார் இரண்டு சம்பவங்கள் குறித்தும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.