வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர்கள் ‘TACO’ (Trump Always Chickens Out) உத்தி என வர்ணிக்கின்றனர். மிகக்கடுமையான இராணுவ அச்சுறுத்தல்களை விடுப்பது, அதன் மூலம் உலகச் சந்தையில் ஒரு பீதியை (Panic) உருவாக்குவது, பின்னர் கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தைகள் வெற்றி எனக்கூறி பின்வாங்குவது அல்லது போர்நிறுத்தத்தை (Ceasefire) அறிவிப்பது என இந்த சுழற்சி மீண்டும் மீண்டும் (Repeat) நடைபெறுவதை இது குறிக்கிறது. தற்போது ஈரானுடனான இரண்டு வார காலப் போர்நிறுத்த அறிவிப்பும் இந்த ‘TACO’ உத்தியின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகிறது.ஈரானின் உள்கட்டமைப்புகளை முழுமையாக அழித்துவிடுவேன் என டிரம்ப் விடுத்திருந்த காலக்கெடு முடிவடைய 90 நிமிடங்களே இருந்த நிலையில், அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இராணுவத் தளபதியுடனான உரையாடலைத் தொடர்ந்து, இந்த இரண்டு வார காலப் போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஒரு மிகப்பெரிய போரைத் தவிர்த்துள்ளதாக டிரம்ப் தரப்பு கூறினாலும், சந்தை வல்லுநர்கள் இதனை டிரம்பின் வழக்கமான “அச்சுறுத்திப் பின்வாங்கும்” உத்தியாகவே கருதுகின்றனர். முன்னதாக, எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், பங்குச் சந்தையில் நிலவும் சரிவைத் தடுக்கவும் அவர் இவ்வாறான முடிவுகளை எடுத்துள்ளதாகத் தணிக்கை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இந்தத் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் தனது 10 அம்ச அமைதித் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளதுடன், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஒப்புக்கொண்டுள்ளது. “அமெரிக்காவின் கடும் அழுத்தத்தின் காரணமாகவே ஈரான் இந்தப் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளது” என டிரம்ப் உரிமை கோரினாலும், ஈரானியத் தரப்பு இதனை ஒரு இராஜதந்திர வெற்றியாகவே கருதுகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தை அனுமதிப்பதன் மூலம் ஈரானுக்கு எதிரான தடைகளை நீக்க அமெரிக்கா இணங்கியுள்ளமை, டிரம்பின் முந்தைய கடும் அச்சுறுத்தல்களிலிருந்து அவர் கணிசமாக இறங்கி வந்துள்ளதைக் காட்டுகிறது.
எவ்வாறாயினும், இந்த ‘TACO’ உத்தியானது சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் நம்பகத்தன்மையை ஒரு கேள்விக்குறியாக்கியுள்ளதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். “ஒரே இரவில் ஒரு நாட்டையே முடக்கி விடுவோம்” போன்ற தீவிரமான சொல்லாடல்களைப் பயன்படுத்திவிட்டு, பின்னர் உடன்படிக்கைகளுக்கு வருவது டிரம்பின் பாணி என்பது தற்போது உலக நாடுகளுக்குப் பழகிவிட்டது. இந்த இரண்டு வார காலப் போர்நிறுத்தம் முடிவடைந்ததும், மீண்டும் ஒரு புதிய அச்சுறுத்தல் வருமா அல்லது நிரந்தர அமைதி ஏற்படுமா என்பதை உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.