சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) 56-வது வருடாந்தக் கூட்டத்தில், காஸா மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான “அமைதி சபை” (Board of Peace) சாசனத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (22) உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளார்.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, துருக்கி மற்றும் பாகிஸ்தான் உட்பட சுமார் 35 நாடுகளின் தலைவர்கள் இந்தச் சாசனத்தில் கையெழுத்திட்டு குழுவில் இணைந்துள்ளனர்.
இந்தச் சபையில் இணைவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு சர்வதேச அரங்கில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் இந்தச் சபையில் தற்போதைக்கு இணைய மறுத்துவிட்டன. குறிப்பாக, புட்டினின் ஈடுபாடு மற்றும் இந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கு இணையாகச் செயல்படக்கூடும் என்ற கவலைகளை இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தச் சபையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிரந்தர உறுப்பினராக இருக்க விரும்பும் நாடுகள் 1 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க வேண்டும் என ட்ரம்ப் நிபந்தனை விதித்திருந்தார். இந்த நிபந்தனைக்கு ரஷ்யா இணங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஸாவில் போர்நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பதற்கான ட்ரம்ப்பின் 20 அம்சத் திட்டத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது. “இந்தச் சபை உருவான பிறகு, ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து நாம் விரும்பிய மாற்றங்களைச் செய்ய முடியும்” என ட்ரம்ப் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.