ஈரான் போர் காரணமாக மூடியுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு சீனா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இம்மாத இறுதியில் சீனாவிற்கு மேற்கொள்ளவிருந்த தனது விஜயத்தைத் தள்ளிவைக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளார். ‘பைனான்சியல் டைம்ஸ்’ இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்தச் சமிஞையை வெளிப்படுத்தியுள்ளார். சீனாவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக, பெய்ஜிங்கின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா தனது எரிபொருள் தேவையில் சுமார் 90 சதவீதத்தை ஹோர்முஸ் நீரிணை வழியாகவே பெறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய ட்ரம்ப், இந்தப் பாதையைப் பாதுகாப்பதில் சீனாவிற்குப் பெரும் பொறுப்புள்ளதாகக் கூறியுள்ளார். நீரிணையைப் பாதுகாக்கும் நோக்கில் தாம் அமைக்கும் கூட்டணியில் சீனா பங்கேற்க வேண்டும் என்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும். இப்பிரச்சினை குறித்துத் தெளிவான முடிவு எட்டப்படும் வரை விஜயம் குறித்த முடிவை எடுக்கப் போவதில்லை என அவர் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், பாரிஸில் அமெரிக்க மற்றும் சீன உயர்மட்ட அதிகாரிகள் பொருளாதார மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட் மற்றும் சீன உப பிரதமர் ஹீ லிஃபெங் ஆகியோர் தலைமையிலான இந்தப் பேச்சுவார்த்தைகள், ட்ரம்பின் சீன விஜயத்திற்கான அடித்தளத்தை அமைப்பதாகக் கருதப்படுகின்றன. எனினும், மத்திய கிழக்கு மோதல்கள் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரம் ஆகியவை இச்சந்திப்பின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளன.
இந்த விஜயம் ரத்து செய்யப்படுவது அல்லது தள்ளிவைக்கப்படுவது இரு நாடுகளின் பொருளாதார உறவுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். வர்த்தக வரி மற்றும் அரிய வகை தாதுக்கள் ஏற்றுமதி உள்ளிட்ட பல முக்கிய விடயங்களில் இணக்கப்பாடுகளை எட்ட வேண்டிய சூழலில், ட்ரம்பின் இந்த அறிவிப்பு வாஷிங்டன்-பெய்ஜிங் இடையிலான உறவின் தற்போதைய பலவீனத்தையே உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.

