கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கான தனது முயற்சியில் ஒரு புதிய உத்தியாக, அந்நாட்டு மக்களுக்கு நேரடியாகப் பணம் வழங்கும் திட்டத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருகிறார்.
கிரீன்லாந்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா 10,000 டொலர் முதல் 100,000 டொலர் வரை (சுமார் 3 கோடி இலங்கை ரூபாய் வரை) நேரடியாக வழங்கி, அவர்களை அமெரிக்காவுடன் இணையச் சம்மதிக்க வைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
கிரீன்லாந்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 57,000 மட்டுமே என்பதால், இந்தத் திட்டத்திற்குச் சுமார் 6 பில்லியன் டொலர் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவைப் போன்ற ஒரு பொருளாதார வல்லரசுக்கு மிகச் சிறிய தொகையாகவே பார்க்கப்படுகிறது.
கிரீன்லாந்து தீவானது அபூர்வ கனிமங்கள் (Rare Earth Minerals), நிலக்கரி மற்றும் எண்ணெய் வளம் நிறைந்த பகுதியாகும்.
ஆர்க்டிக் பிராந்தியத்தில் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்புத் தளங்களை (Missile Defense Systems) வலுப்படுத்தவும் கிரீன்லாந்து ஒரு முக்கிய மையமாகக் கருதப்படுகிறது.
டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசமாக விளங்கும் கிரீன்லாந்து, ஏற்கனவே தங்களை “விற்பனைக்கு இல்லை” என அறிவித்துள்ளது. எனினும், அந்நாட்டு மக்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பைத் தூண்டும் நோக்கில் டிரம்ப் நிர்வாகம் இந்த நிதிச் சலுகைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

