திருகோணமலை சிலை அகற்றம்: ‘இது இன மோதல் அல்ல, பொலிஸாரே மோசமாக நடந்துகொண்டனர்’ – கல்யாண வன்ஸ திஸ்ஸ தேரர்!

image 8788205535

திருகோணமலைக் கடற்கரையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விடயத்திலும், பின்னர் அச்சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்ட விடயத்திலும் இங்கு வாழும் தமிழ் மக்களுக்கோ, முஸ்லிம் மக்களுக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாராதிகாரி தேரர் கல்யாண வன்ஸ திஸ்ஸ தேரர் கூறினார்.

புதன்கிழமை (நவம்பர் 19) அன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் என்னுடன் தனிப்பட்ட முறையில் மிகவும் நட்புணர்வுடனே பழகி வருகின்றனர்,” என்று தேரர் குறிப்பிட்டார்.

“ஆனால், பொலிஸாரே மிகவும் மோசமாக நடந்துகொண்டனர். எனவே யாரும் இதனை இனரீதியான மோதல் என்று கூறி விடயத்தை திசை திருப்ப வேண்டாம்,” எனக் கேட்டுக்கொண்டார்.

“திருகோணமலை கடற்கரையில் 1952ஆம் ஆண்டு முதல் மாவட்டத்தின் முதலாவது தர்ம பாடசாலை இயங்கி வந்தது.”

“2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையினால் இங்கிருந்த பாடசாலைக் கட்டிடம் முற்றாக அழிவடைந்தது. அது பின்னர் புனரமைக்கப்படவில்லை. எனினும் நீண்டகாலமாக இதனைப் புனரமைக்க வேண்டும் என விரும்பினோம்.”

இந்நிலையில் இம்மாதம் இது தொடர்பில் எமது விஹாரையின் நிர்வாகக் குழுவின் தீர்மானப்படி அழிவடைந்த கட்டிடத்தைக் கட்டுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில், “நாங்கள் நீதியை, சட்டத்தை மதிக்கின்றோம். எமக்கு உரிய நீதி கிடைக்கும் என நம்புகின்றோம்,” என்றும் தேரர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version