திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

26 696e81aa1ff67

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர், தன்னுடன் விளக்கமறியலில் உள்ள ஏனைய மூன்று பிக்குகளை அச்சுறுத்தித் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருகோணமலை போதிராஜ விஹாரைப் பகுதியில், கடலோரப் பாதுகாப்புச் சட்டங்களை மீறிப் புத்தர் சிலையை நிறுவிய குற்றச்சாட்டில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் (இயற்பெயர்: கசுன் திலுக்க குலரத்தன) உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் தமக்குத் தெரியாமல் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கருதும் ஏனைய மூன்று பிக்குகள், நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி வழக்கிலிருந்து விடுதலையாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அவர்கள் விடுதலையானால் தனது இனவாத அரசியல் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்பதால், கஸ்ஸப தேரர் அவர்களை அச்சுறுத்திப் பணிய வைத்துள்ளதாகத் தெரியவருகிறது.

பௌத்த மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையை ஒரு பெரும் சிக்கலாக வளர்த்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் கஸ்ஸப தேரர் செயற்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் ஏனைய ஐந்து சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பாதுகாப்பு விதிகளின் கீழ் இந்த சட்டவிரோதக் கட்டுமானம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Exit mobile version