திருகோணமலை கடற்கரையோரத்தில் சர்ச்சைக்குரிய முறையில் புத்தர் சிலையை நிறுவி, கரையோரப் பாதுகாப்புச் சட்டங்களை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஐந்து பொதுமக்கள் இன்று (19) காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதவான், கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஒன்பது பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இன்றைய வழக்கு விசாரணையின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, பௌத்த மகா சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, திருகோணமலை நீதிமன்ற வளாகம் மற்றும் நகர் முழுவதும் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரால் விசேட பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.
திருகோணமலை போதிராஜ விஹாரைக்கு அருகிலுள்ள கடற்கரையோரத்தில், உரிய அனுமதியின்றி புத்தர் சிலை ஒன்றை நிறுவியமைக்காக, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் அளித்த புகாரின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தற்போது திருகோணமலையில் பெரும் மத மற்றும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

