திம்புல பத்தனை சந்திப்பில் கோர விபத்து: லொறியுடன் மோதிய பேருந்து பயணிகள் – ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்!

accident tiruvarur

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் திம்புல பத்தனை சந்திப்பில் இன்று (20) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி பேருந்து பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

டயகமவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, இன்று காலை 7:00 மணியளவில் திம்புல பத்தனை சந்திப்பில் நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்தின் ஓட்டுநர் ஓய்வெடுப்பதற்காக, வீதியின் எதிர் திசையில் பேருந்தை நிறுத்தியிருந்ததாகத் தெரியவருகிறது.

அச்சமயம், பேருந்தில் பயணித்த இரண்டு பயணிகள் அதன் பின்புறக் கதவு வழியாக கீழே இறங்கி பிரதான வீதிக்கு வந்துள்ளனர். அப்போது, நாத்தண்டியாவிலிருந்து நுவரெலியா நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லொறி ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது.

விபத்தில் சிக்கிய இருவரில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றைய பயணி படுகாயமடைந்த நிலையில் உடனடியாக கொட்டகலை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா அடிப்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், திம்புல பத்தனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Exit mobile version