ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் ஏகாதசியை முன்னிட்டுப் பக்தர்கள் தரிசனத்திற்காகத் திரண்டபோது ஏற்பட்ட பயங்கரமான கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியாகியுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏகாதசி விரதத்தையொட்டிப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தபோது, திடீரென ஏற்பட்ட நெரிசலே விபத்துக்குக் காரணமாக அமைந்தது. பலியானவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.
மேலும், இந்த நெரிசலில் சிக்கிய பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து அறிந்தவுடன், காவல்துறையினர் உடனடியாகச் சம்பவப் பகுதிக்கு விரைந்து, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், நிலைமையைச் சீராக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.