அளுபோமுல்ல, படதொப துடுவ பிரதேசத்தில் தந்தையின் கைகளிலிருந்து தவறி விழுந்த இரண்டரை மாதக் குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ருசேலி கெயாஷா எனும் 2.5 மாதக் குழந்தை கடந்த ஜனவரி 7-ஆம் திகதி காலை, இரவுப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய தந்தை, அழுத குழந்தையைச் சமாதானப்படுத்த கைகளில் ஏந்தித் தாலாட்டியுள்ளார். அப்போது அதீத களைப்பு காரணமாக அவருக்குத் தெரியாமலேயே தூக்கம் ஏற்பட்டுள்ளது.
தந்தையின் பிடியிலிருந்து நழுவிய குழந்தை, சீமெந்து தரையில் தலை மோதி விழுந்துள்ளது. இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
குழந்தை உடனடியாக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே (LRH) சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. அங்கு மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
தலையின் வலது பக்கம் ஏற்பட்ட காயம் காரணமாக மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு, இரத்தம் உறைந்தமையே மரணத்திற்குக் காரணம் என உறுதி செய்யப்பட்டது.
ஆரம்பத்தில் பயம் காரணமாக விபத்து குறித்து மறைத்த தந்தை, பின்னர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று நடந்த உண்மைகளை ஒப்புக்கொண்டார். தனக்கு ஏற்பட்ட திடீர் தூக்கமே இந்த விபரீதத்திற்குத் தாளாத துயரத்தை ஏற்படுத்தியதாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் தந்தை அளுபோமுல்ல பொலிஸாரால் நேற்று (18) கைது செய்யப்பட்டார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை எனத் தாய் தரப்பில் கூறப்பட்ட போதிலும், கவனக்குறைவாக இருந்தமை குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

