சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியுடைய “குஷ்” (Kush) போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்தி வர முயன்ற மருதானைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த, உணவு விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஒரு வர்த்தகராவார்.
இவர் மலேசியாவிலிருந்து போதைப்பொருளைப் பெற்றுக்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) நிறுவனத்திற்குச் சொந்தமான SQ-468 எனும் விமானம் மூலம் கட்டுநாயக்கவை வந்தடைந்தார்.
விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்றபோது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) அதிகாரிகளால் இவர் சோதனையிடப்பட்டார். அவரது பயணப் பையினுள் 03 பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 01 கிலோகிராம் 024 கிராம் எடையுடைய “குஷ்” போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா (ரூ. 10,000,000) என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைக்காகச் சந்தேக நபரையும் போதைப்பொருள் பொதிகளையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் கடத்தி வருபவர்களைக் கண்டறிய விமான நிலையத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.