‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உதவிக் கொடுப்பனவுகள் மற்றும் வீடுகளைச் சீரமைப்பதற்கான மானியங்கள் முழுமையாக வழங்கி முடிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
புயலால் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட 3,000 மாணவர்களுக்கு தலா 15,000 ரூபாய் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. சேதமடைந்த வீடுகளைச் சுத்தம் செய்யவும், மீட்டெடுக்கவும் ஒதுக்கப்பட்ட 25,000 ரூபாய் மானியம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வீடுகளை முழுமையாக இழந்து தற்போது தற்காலிகமாக வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, மாதாந்திர வாடகை உதவியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளைக் கட்டித் தருவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. புதிய வீடுகளைக் கட்டுவதற்குப் பொருத்தமான நிலங்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளன.
கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்னர், அந்த நிலங்களின் பாதுகாப்பு மற்றும் பொருத்தத்தை உறுதி செய்ய தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திடம் (NBRO) ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிவாரண உதவிகள் தொடர்பாகத் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள மேன்முறையீடுகளை அதிகாரிகள் தீவிரமாக மீளாய்வு செய்து வருகின்றனர். விடுபட்ட தகுதியுள்ள நபர்களுக்கு இந்த ஆய்வின் பின்னர் உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் என ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.