இலங்கையில் வாகனங்களைப் பதிவு செய்யும் நடைமுறைகளில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பதை ஜனவரி 05 முதல் கட்டாயமாக்கியுள்ளது.
புதிய வாகனப் பதிவு (New Registration) மற்றும் ஏற்கனவே உள்ள வாகனங்களின் உரிமை மாற்றம் (Transfer of Ownership) ஆகிய இரண்டிற்கும் இந்த விதிமுறை பொருந்தும்.
புதிய உரிமையாளர் தனது தேசிய அடையாள அட்டை (NIC) அல்லது வணிகப் பதிவு (BR) இலக்கத்துடன், தனது TIN இலக்கத்தையும் திணைக்களத்தின் கணினி முறைமையில் உள்ளீடு செய்ய வேண்டும்.
சாதாரண மக்களின் பயன்பாட்டைக் கருத்திற்கொண்டு உந்துருளிகள் (Motorcycles), முச்சக்கர வண்டிகள் (Three-wheelers), உழவு இயந்திரங்கள் மற்றும் கை உழவு இயந்திரங்கள் (Tractors & Hand Tractors) வாகனங்களுக்கு TIN இலக்கம் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வரி வருமானத்தை முறைப்படுத்துதல் மற்றும் வரி செலுத்துவோரின் வலையமைப்பை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் நீண்டகாலப் பொருளாதாரக் கொள்கையின் ஒரு அங்கமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சொத்து விபரங்களை வரி திணைக்களத்துடன் (IRD) எளிதாக இணைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

