அவுஸ்திரேலியாவில் பயங்கரம்: துப்பாக்கிச்சூட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகொலை!

Australia

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாகாணத்தில் உள்ள லேக் கார்ஜெலிகோ (Lake Cargelligo) பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டை அதிரவைத்துள்ளது.

லேக் கார்ஜெலிகோ பகுதியில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு மூன்று சடலங்கள் மீட்கப்பட்டதுடன், ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தாக்குதலாளி இன்னும் தலைமறைவாக இருக்கக்கூடும் என்பதால், அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனப் பொலிஸார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மாகாணம் முழுவதும் ஆயுதம் ஏந்திய பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா ஏற்கனவே துப்பாக்கிக் கட்டுப்பாட்டில் மிகவும் கடுமையான விதிகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி சிட்னியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அரசாங்கம் துப்பாக்கி உரிமங்களை மேலும் கடுமையாக்கியது.

பொதுமக்களிடம் உள்ள சட்டவிரோதத் துப்பாக்கிகளைத் திரும்பப் பெறும் விசேட திட்டத்தையும் அவுஸ்திரேலிய அரசு அண்மையில் முடுக்கிவிட்டிருந்தது.

இவ்வாறானதொரு தீவிரக் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு மத்தியிலும், ஒரே நேரத்தில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அவுஸ்திரேலியாவின் பொதுப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இது ஒரு தனிப்பட்ட பகை காரணமாக நடந்ததா அல்லது திட்டமிட்ட குற்றமா என்பது குறித்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Exit mobile version