மின்சார சபை ஊழியர்கள் என்று கூறி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவர், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஒருவரின் கை, கால்களைக் கட்டி, சுமார் ரூ. 620,000 (6 லட்சத்து 20 ஆயிரம்) மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்ற சம்பவம் குறித்து மாதம்பை பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (நவ 15) அன்று மாலை மாதம்பை, பொதுவில பகுதியில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரத்நாயக்க முதியன்சேலாகே சோமாவதி (வயது 72) என்ற மூதாட்டி அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் தனது கணவரும் மகளும் வீட்டில் இல்லை என்று தெரிவித்த மூதாட்டி, மின்சார சபை ஊழியர்கள் என்று கூறி மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆண்கள் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்ததாகவும், கொள்ளையர்களைத் தனக்குத் தெரியாது என்றும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
மாதம்பை பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

