யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் உத்தரவிட்டார்.
தையிட்டியில் உள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றினால் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
வேலன் சுவாமிகள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் சார்பாகப் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா சிரேஷ்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்
தையிட்டி விகாரை விவகாரம் வடக்கு அரசியலில் நீண்டகாலமாக ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வரும் நிலையில், இந்த வழக்கு விசாரணை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

