தையிட்டி விகாரை காணி தமிழ் மக்களுக்குச் சொந்தமானது – நயினாதீவு நாகவிகாரை விகாராதிபதி அதிரடி வெளிப்பாடு!

images 6 7

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையானது மக்களின் தனிப்பட்ட காணிகளை ஆக்கிரமித்தே உருவாக்கப்பட்டுள்ளதாக நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி நவதலகல பத்ம தேரர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் விகாரை அமைந்துள்ள காணி காங்கேசன்துறை தையிட்டி பகுதி மக்களுக்குச் சொந்தமானதாகும். யுத்த காலத்தில் சிவில் மக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட இந்தக் காணியில் திஸ்ஸ விகாரை சட்டவிரோதமாகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

போலியாக அமைக்கப்பட்ட இந்த விகாரையின் விகாராதிபதிக்கு, பௌத்த தர்மத்திற்கு மாறாக ‘வடக்கு பிராந்திய பிரதான சங்கநாயக்க’ பதவி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார்.

புதிய தேரர் ஒருவர் தையிட்டிக்கு வந்து, தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாகக் கையகப்படுத்தி புதிய கட்டடங்களை எழுப்பி வருவதாகவும், இது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

53 வருடங்களாக நயினாதீவில் தமிழ் மக்களுடன் இணைந்து வாழ்ந்து வருவதைச் சுட்டிக்காட்டிய தேரர், இவ்வாறான ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் இனங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

“அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். ஏனைய தேரர்கள் இது குறித்துத் தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்க வேண்டும். முறையான தீர்வு கிடைக்காவிடின், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடன் இணைந்து நாம் செயற்பட வேண்டிய நிலை ஏற்படும்” என அவர் விடுத்துள்ள காணொளியில் மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Exit mobile version