ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள மியூனிக் நகரில், பொதுமக்கள் முகமூடி அணிந்த சிலர் கட்டிடங்களுக்குள் சென்று பதுங்குவதைக் கண்டதால் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினரை நோக்கி முகமூடி அணிந்தவர்கள் சுட, காவல்துறையினரும் திருப்பிச் சுட, ஒருவர் காயமடைந்தார்.
பின்னர், பொதுமக்கள் முகமூடிக் கொள்ளையர்கள் என்று நினைத்தவர்கள் உண்மையில் ராணுவ வீரர்கள் என்பது தெரியவந்தது. ராணுவம் “Marshal Power 2025” என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய அளவிலான பயிற்சிக்குத் திட்டமிட்டிருந்தது.
இந்த ஒத்திகையில் 500 ராணுவ வீரர்கள், 300 காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் பங்கேற்கவிருந்தனர். ஆனால், அந்த நடவடிக்கையைப் பற்றி பொதுமக்களுக்கோ அல்லது உள்ளூர் காவல்துறையினருக்கோ எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை.
இதனால், முகமூடி அணிந்த ராணுவ வீரர்களைப் பொதுமக்கள் கொள்ளையர்கள் என நினைத்து உள்ளூர் காவல்துறையினரை அழைத்துள்ளனர்.
காவல்துறையினரைக் கண்ட முகமூடி அணிந்த ராணுவ வீரர்கள், இதுவும் ஆபரேஷனின் ஒரு பகுதியென நினைத்து, அவர்களை நோக்கி வெற்று குண்டுகளைச் (Blank Rounds) சுட்டுள்ளனர். தங்களைத் நோக்கி முகமூடி அணிந்தவர்கள் சுட்டதால், காவல்துறையினர் உண்மையாகவே அவர்களை நோக்கிச் சுட, ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார்.
மொத்தத்தில், ராணுவ வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, மக்கள் அதிர்ச்சியடைந்து அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது.