சூறாவளி நிவாரணம்: பதுளை மக்களுக்குச் சிகிச்சையளிக்க கேரளாவிலிருந்து வந்த சிறப்பு மருத்துவக் குழு!

images 1 6

‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டு பதுளை மாவட்டத்தில் உள்ள “சுரக்சா” முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக, இந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த ஐந்து சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு நேற்று (23) இலங்கைக்கு வருகை தந்தது.

சுற்றுலா துணை அமைச்சர் ருவான் ரணசிங்கவின் விசேட அழைப்பின் பேரில் இக்குழு வருகை தந்துள்ளதோடு, நேற்று மாலை 4.15 மணியளவில் சென்னையிலிருந்து ‘இண்டிகோ’ (6E-1179) விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இம்மருத்துவர்கள் பங்கேற்கும் விசேட மருத்துவக் கிளினிக்குகள் இன்று (ஜனவரி 24) மற்றும் நாளை (ஜனவரி 25) ஆகிய இரு தினங்கள் பதுளையில் நடைபெறவுள்ளன.

இந்த மருத்துவப் பணியில் கேரளா மருத்துவர்களுடன் இணைந்து இலங்கை மருத்துவர்கள் உட்பட மொத்தம் 25 பணியாளர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.

சமீபத்திய டித்வா சூறாவளியினால் பதுளை மாவட்டத்தின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கவும், காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் இந்தச் சர்வதேச மருத்துவக் குழுவின் வருகை பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version